Tuesday, July 20, 2010

குரு நான் மற்றும் வத்தக்குழம்பு

சென்ற வாரம் ஒரு நாள் சில மணி நேரம் எனது குரு என்னகத்துக்கு வந்திருந்தார். என்னகத்துக்காரி அகத்தில் இல்லாததால் தான் சமைப்பதாகச் சொன்னார். ரசம் ஒரு கறிகாய் என ஆரம்பித்து நான் வத்தக் குழம்பில் முடித்தேன். இனி உரையாடலாக....

குரு : ஆம்பள (ஐகாரக்குறுக்கம்) சமயல்ங்க்றது சரியாதான் இருக்கு ... பாத்திரம் கழுவாம இருக்கு பார்...
நான் : வெறும் மூன்று பாத்திரங்கள் தானே இருக்கு ...
குரு : புளி எடு. எங்கே புளி வாங்குற ?
நான் : இங்கே பக்கத்துல இருக்கிற கடையில் தான்.
குரு : மசாலா... தும்கூர் பக்கதுல தான இருக்கு? மார்க்கெட் போனா ரொம்ப சௌகரியமான விலைல வாங்கலாம்.
நான் : எப்படி பார்த்து வாங்குறது?
குரு : நல்ல அகலமா திக்கா இருக்கும். கொட்டை இருக்காது.
நான் : பழசா போனா நன்னா இருக்குமா?
அதெல்லாம் நன்னா தான் இருக்கும்.
ஸரி, ஒரு சில வாரங்களில் போய் வாங்குறேன்.
Summer முடியறதுக்கு முன்னாடி போய் வாங்க வேண்டும்.
ஒரு பாத்திரம் கொடு..புளிய (மறுபடியும் ஐகாரக்குறுக்கம்) ஊற வைக்கனும்
<நான் ஒரு பாத்திரம் கொடுக்கிறேன் >
இது பால் பாத்திரம் இல்லையே ?
ஹி..ஹி.. இது பால் பாத்திரம் தான் ..
அதுக்கு தான் கேட்டேன் ... வேற கொடு.
புளி கரைபதுல கூட chemistry வருது பார்... extraction of solvent . ஒரே தடவையா தண்ணிய விடக் கூடாது.. .கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்
--Hereafter the core topic demonstration--
புளி கொஞ்சம் உள்ளங்கையில் எடுத்து அதை அமுக்கி உருட்டினால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு இருக்க வேண்டும்.
நல்ல தண்ணீரில் புளியை ஊறவைக்கவேண்டும் .
தண்ணீர் சூடா இருந்தா சட்டென புளி இழகும் கரைக்க (extraction of solvent) இலகுவா இருக்கும். கொஞ்சம் கூட வேஸ்ட் செய்யக்கூடாது.
ஒரு சின்ன பாத்திரம் எடுத்து அதுல நல்லெண்ணெய் விட்டு (சற்று அதிகமாவே ) கடுகு, விரல் நுனி பிடிக்கும் அளவு வெந்தயம், போட்டு வெடித்தவுடன்,
தேவையான அளவு (20 - 30 ) சுண்டைக்காய் வற்றல், 5 - 6 மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.....
வதக்குறது ரொம்ப முக்கியமான-step ரொம்ப கருகவும் விடக்கூடாது அதே சமயம் சரியா வதக்கலேன்னா சுண்டைக்காய் கசக்கும் .... குழம்பின் மணமும் கெட்டுப்போகும்.
இப்போ அது தலைல புளித்தண்ணிய விட்டு ... ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சமா தண்ணிய விட்டு புளிய கரைக்கணும். சற்று கொதித்த பின் (2 minutes ) சாம்பார் பொடி 1 ஸ்பூன் (வீட்டில் அரைத்தது விசேஷம் , காரம் உங்கள் பொடியை பொறுத்து அளவு மாறும்) சேர்த்து , மூன்று விரல் சேர்த்து 2 ஆம் கோடு வரை கல் உப்பு எடுத்து சேர்க்கவேண்டும். கொஞ்சம் மஞ்சள் பொடி (ஒரு விரல் நுனி அளவு ) சேர்ப்பது உங்கள் விருப்பம். அடுப்பை மெல்லிதாக சூட்டில் வைக்கவும், வேகமாக வைத்தால் pre-matured ஆக evaporate ஆகிவிடும் , மெதுவா கொதிக்கும் போதுதான் சுவையும் மணமும் அதிகமாகும். குழம்பு கொதிக்கும் வாசனை இப்பொழுதே வந்திருக்கும்.. சுவை பார்த்து உப்பு and or தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அடிப்படையா பச்சை புளி வாசனை இருக்கக்கூடாது, வறட்டு சாம்பார் பொடி காரமும் இருக்கக்கூடாது.

இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்கவிட்ட பின் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவை கால் டம்பளர் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்ளவும் ...
இந்நேரம் மெல்லிதான சூடினால் குழம்பு நுரை போல பரவலாக கொதித்துக்கொண்டிருக்கும்... இப்பொழுது அதன் தலையில் அரை டீஸ்பூன் பெருங்காயம் கொட்டி, ஒரு கொதி விட்டு , ஒரு சின்ன வெல்லக்கட்டி (மண்டை வெல்லம்) பொடி செய்து போட்டு 15 - 30 seconds கொதிக்க வைத்து சற்று முன்னர் கரைத்த அரிசி மாவை சேர்த்தால் .... வற்றல் குழம்பு ரெடி !!!!

என் தமக்கை அரிசி மாவை விட்ட பின் ஒரு கொதி விடுவார்...

இதில் இரண்டு விசயங்களை மறைத்து விட்டேன் .... அது ரகசியம் ஆனால் அது extra தான் basic இல்லை :) :)
நல்ல மழை பெய்யும் பொழுது வற்றல் குழம்பு சாதம் , துணைக்கு தேங்காய் எண்ணெயில் பொறித்த வடாம் ....
<நான் எங்கே இருக்கேன் ...அட மெய் மறக்கிற combination நு சொன்னேன் ... ஒரு உப்பிட்ட நார்த்தங்காய் துண்டு ... அடடா ....>

இந்த ப்ளாக் பற்றி அம்மாவிடம் பேசிகொண்டிருந்த பொழுது அவர் சில தகவல் தந்தார்.
* முடிவில் ஒரு ஸ்பூன் தேன் விடுதல்.
* சாம்பார் பொடியை புளி விடும் முன்னர் கடுகு தாளிக்கும் பொழுது 3 - 4 செகண்ட்ஸ் வருத்துக் கொள்ளவேண்டும். (கவனம் சாம்பார் பொடி கருகும் வாய்ப்பு உள்ளதால் இதை சற்று பழக்கம் வந்த பின் முயற்சித்தல் ஷேமம்.)

இந்த ப்ளாக் ஐ எத்துனை பேர் படிக்கிறார்கள் என தெரியவில்லை. இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் வத்தக் குழம்பிற்கு ஏற்ற சில பதார்த்தங்களை பின் வரும் போஸ்டில் தெரிவிக்கிறேன் எனக் கூறி அமைகிறேன். (இப்படி எழுதுவதில் என்ன பிழை இருக்கிறது எனச் சொன்னால் அடுத்த போஸ்ட் ரெடி :) )